Saturday 25 November 2017

சென்ற வார உலகம்

பாகிஸ்தான்: இஸ்லாமாபாத்தில் கலவரம் ஒடுக்க தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புக்கு தடை 

பாகிஸ்தான் அரசு சமீபத்தில் கொண்டு வந்த சட்ட திருத்தம் ஒன்று தங்கள் மத கோட்பாட்டுக்கு எதிராக இருப்பதாக கூறி சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. அந்த சட்டத்தை மீண்டும் மாற்றி அமைத்து விட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது ஆனால் சட்டத்தை கொண்டு வந்த சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அந்த அமைப்புகள் போராட்டத்தை கை விட மறுத்து தொடர்ந்து போராடி வந்தனர், இஸ்லாமாபாத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை ஒன்றை  போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  இதையடுத்து பாகிஸ்தான் நாட்டு உயர்நீதிமன்றம் போராட்டக்காரர்களை கலைக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. 8500 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு  படையினரும், போலிசாரும் இணைந்து போராட்டக்காரர்களை விரட்டும் பணியில் ஈடுபடுத்தபட்டதில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை க்ண்டுகளும், ரப்பர் குண்டுகளும் வீசப்பட்டது, போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதில் நடவடிக்கையாக பாதுகாப்பு படை வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.  இந்த  சம்பவங்களை நேரடியாக ஒளிபரப்பி வந்த தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டு உள்ளன. 


எகிப்து: மசூதியில் தீவிரவாதிகள்  தாக்குதலில் 235 பேர் பலி 

நேற்று வெள்ளிகிழமை நவம்பர் 24ஆம் தேதி எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியிலுள்ள அல் ரவ்தா மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் 235 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மசூதியின் பல இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தும் வெளியில் தப்பி ஓடி வரும் மக்களை துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளனர். மசூதியிலிருந்து    வெளியேறும்   மக்கள் தப்பிக்க   முடியாதபடி வெளியில் நின்றிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து உள்ளனர். மனிதத்தன்மையற்ற இந்த கொடூர தாக்குதலை உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது ஐஎஸ் தீவிரவாத இயக்கமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  


ஜிம்பாப்வே: புதிய அதிபராக எம்மர்சன் பதவியேற்றார் 

ஜிம்பாப்வே நாட்டில் கடந்த வாரத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது, அதிபர் பதவியில் இருந்து விலக மறுத்து வந்த ராபர்ட் முகாபே அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடி காரணமாக பதவி விலகியதை தொடர்ந்து வெள்ளிகிழமை அன்று புதிய அதிபராக துணை அதிபர் பதவி வகித்து வந்த 75 வயதான எம்மர்சன் நங்கக்வா பதவியேற்றார். கடந்த 37 ஆண்டுகளாக ஜிம்பாப்வே நாட்டை ஆட்சி செய்த முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வந்ததை அந்நாட்டின் பொதுமக்கள் பலர் கொண்டாடி வருகின்றனர். இப்போது அதிபர் ஆகியிருக்கும் எம்மர்சன் வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள போது தேர்தலில் வெற்றி பெற்றால் தான் அதிபர் நாற்காலியை தக்க வைத்து கொள்ள முடியும் என்பது 
குறிப்பிடத்தக்கது. 


காணாமல் போன அர்ஜென்டினா நீர்முழ்கி கப்பல் தேடும் பணி தீவிரம்

தெற்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் காணாமல் போன  அர்ஜென்டினா நாட்டு ராணுவ நீர்முழ்கி கப்பல், கடைசியாக ராடார் சிக்னல் கிடைத்த  இடத்துக்கு அருகிலிருந்து பலத்த சத்தம் கேட்டதால் நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறியிருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதையடுத்து காணாமல் போன நீர்முழ்கி கப்பலை தேடும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளது. கப்பலில் பயணித்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பாதுகாப்பு குறைபாடு கொண்ட கப்பலில் தங்கள் உறவுகளை பயணம் செய்ய வைத்து விட்டதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர். 


அமெரிக்கா: அமெரிக்க அதிபரின் டைம் கேம்

கடந்த வருடம் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம் பத்திரிக்கை 2௦16 ஆம் வருடத்தின் சிறந்த மனிதராக அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பை தேர்ந்தெடுத்து அறிவித்தது.  இந்த ஆண்டும் டைம் பத்திரிக்கை சிறந்த மனிதராக தன்னை அறிவிக்க விரும்பி தன்னை தொடர்பு கொண்டதாகவும்  ஆனால் தான் அதை மறுத்து விட்டதாகவும் ட்ரம்ப் டிவிட்டரில் தெரிவித்திருந்தார், ஆனால் டைம் பத்திரிக்கை இந்த செய்தியை மறுத்துள்ளது. 

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 17 November 2017

சென்ற வார உலகம்

ஜிம்பாப்வே - இராணுவ ஆட்சி  
ஜிம்பாப்வேயில் நாட்டில் ராணுவம் ஆட்சியை கைபற்றியுள்ள நிலையில், 1980ஆம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலமாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் 93 வயதாகும் அந்நாட்டு அதிபரான ராபர்ட் முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள  அவர், வீட்டுக்குள் இருந்தபடியே ராணுவ உயர்அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்,  இப்போது வரை ராபர்ட் முகாபே பதவி விலக மறுத்து வருகிறார். ராபர்ட் முகாபேக்கு பிறகு யார் ஆட்சிக்கு வருவது என்று துவங்கிய அதிகார போட்டியில் தனக்கு பின் தன் மனைவியை அதிபராக்க ராபர்ட் முகாபே முயற்சித்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த துணை அதிபரான எம்மர்சன் மனங்காக்வாவை பதவி நீக்கம் செய்ததை அடுத்து ராணுவம் ஆட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுள்ளது. நாட்டை கைப்பற்றியுள்ள ராணுவமோ நாங்கள் அதிபரை வீட்டு சிறையில் வைக்கவில்லை என்று மறுத்து வருகிறது. 



ஏமன்: பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் மடியும் அபாயம் 
ஏமன் நாட்டுக்கு உதவி பொருட்கள் (உணவு, மருந்து, தண்ணீர்) கொண்டு செல்லும் தரை, வான் மற்றும் கடல் வழித்தடங்கள் எல்லாவற்றையும் சவுதி அரசு அடைத்துள்ள நிலையில் அந்நாட்டில் இந்த சூழ்நிலை காரணமாக வரபோகும் கடும் பஞ்சத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாடு கிளர்ச்சியாளர்களுக்கு போர்கருவிகளை ஏமன் நாட்டின் எல்லைபகுதி வழியாக கடத்தி வருவதால் அந்த வழித்தடங்களை அடைத்து விட்டதாக சவுதி அரசு கூறி வருகிறது, ஐ நா சபையின் எச்சரிக்கைக்கு பிறகு உலக நாடுகள் அனைத்தும் சவுதி அரசை ஏமன் நாட்டுக்கு செல்லும் வழித்தடங்களை திறக்கும்படி நிர்பந்தித்து வருகின்றன.   


ஈராக்: முடிவுக்கு வரும் ஐஸ்ஐஸ் ஆதிக்கம்
கடந்த வெள்ளி அன்று, ஈராக் படையினர் ஐஸ்ஐஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த கடைசி நகரமான ராவாஹ்வையும் விடுவித்ததை அடுத்து ஈராக் நாட்டில் ஐஸ்ஐஸ் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது, ராவா ஹ் நகரத்தில் அமெரிக்க விமான படையோடு இணைந்து ஈராக் படையினர் தொடர்ந்து நடத்திய ஐந்து மணி நேர தாக்குதல்களில் ஐஸ்ஐஸ் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். ஏற்கெனவே சிரியாவில் ஐஸ்ஐஸ் ஆக்கிரமித்த பகுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக விடுவிக்கப்பட்ட நிலையில் இப்போது ஈராக் முழுமையாக ஐஸ்ஐஸ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.  


ஈரான் நிலநடுக்கம் 
கடந்த திங்கள்கிழமை அதிகாலை ஈரான்-இராக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் (ரிக்டர் அளவுகோலில் 7.3-ஆகப் பதிவாகி உள்ளது) நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்துள்ள மக்கள் இரவில் நடுங்கும் குளிரில் வெட்டவெளிகளில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. பெரும் எண்ணிகையில் காயமடைந்த மக்கள் மருத்துமனைகளில் குவிந்து வருவதால் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துமனைகள் திணறி வருகின்றன.

பில்லியன் கேப்ச்சர் பிளஸ் 
ஆன்லைன் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் இப்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. கடந்த வாரம் பில்லியன் கேப்ச்சர் பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டு உள்ளது. 5.5 இன்ச் தொடுதிரையுடன், 13 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 8 மெகாபிக்சல் முன்புற கேமராவும் கொண்டுள்ளது.  ஆக்டோகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 625  பிராசசர் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்  3 ஜிபி RAM + 32 ஜிபி ROM கொண்ட மாடல்  ரூ. 10,999க்கும்  4GB RAM + 64GB ROM கொண்ட மாடல் ரூ. 12,999 க்கும் கிடைக்கிறது. 

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 11 November 2017

சென்ற வார உலகம்

அமெரிக்கா: சர்ச்சில் நடந்த துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலி

கடந்த ஞாயிறு அன்று, அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சதர்லாண்ட் ஸ்ப்ரிங்ஸ் பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். குறைந்தது 20 பேர் வரை காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்க் போம்ரே என்ற பாப்திஸ்து சபை போதகர் அவர்களின் மகளும் இந்த துப்பாக்கி சூட்டில் பலியாகி இறந்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய 26 வயதான டெவின் பேட்ரிக் கெல்லியை காரில் போலீசார் துரத்தி பிடிக்க முயன்ற போது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் கெல்லி இறந்து விட்டான், இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிக கொடூரமான தாக்குதல் என்று வேதனையுடன் வருத்தம் தெரிவித்துள்ளார். 


சவுதி அரேபியா - லெபனான் போர் மூளும் அபாயம்

சவுதி அரேபியா நாட்டிற்கும் லெபனான் நாட்டிலுள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் இப்போது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான யுத்தமாக உருமாற துவங்கி உள்ளது. சவுதி அரேபியா நாட்டில் நடந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கமே காரணம் என்று சவுதி அரசு கருதுகிறது.  ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கத்திற்கு சவுதி அரேபியா அரசு அமெரிக்காவோடும், மேற்கத்திய நாடுகளோடும் காட்டி வரும் நெருக்கம் பெரும் வருத்தத்தை அளித்து வந்தது. சவுதி அரசாங்கமே, தீவிரவாத இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்க தவறியதாக கூறி லெபனான் நாட்டின் பிரதமரை பதவி விலக செய்தது என்றும், பின்பு லெபனான் பிரதமரை செயல்பட விடாமல் வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கம் சவுதி அரேபியா அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது, இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் சவுதி அரசாங்கம், ஏமன் பகுதியிலிருந்து தங்கள் நாட்டின் மேல் கடந்த சனிக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தி தங்கள் நாட்டின் மீது லெபனான் போர் தொடுத்துள்ளது என்று கூறி,  லெபனான் நாட்டிலுள்ள தங்கள் நாட்டு மக்களை அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறும்படி எச்சரிக்கை செய்துள்ளது. இதனை தொடர்ந்து குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை லெபனான் நாட்டில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளன.  இந்த நடவடிக்கை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 



வியட்நாம்: மழை - வெள்ளத்தில் சிக்கி 106  பேர் பலி

வியட்நாம் நாட்டில் பல சர்வதேச நாடுகளின் அதிபர்கள் கலந்து கொள்ளவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில் அந்த நாட்டை டாம்ரே புயல் உலுக்கியெடுத்து வருகிறது, பெரும் புயலோடு 1700 மிமீ மழை பெய்ததில் 49 அணைகள் அபாய அளவை தாண்டி விட்டதால் அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 197  பேர் புயலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன:



இந்தியா: டில்லியில் விஸ்வரூபமெடுக்கும் காற்று மாசு வீட்டுக்குள் முடங்கும் மக்கள்

நம் நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்று 144 தடை உத்தரவை அரசாங்கம் பிறப்பிப்பது வழக்கம், ஆனால் கடும் பனிப்பொழிவோடு காற்றில் மாசும் அளவுக்கதிகமாக அதிகரித்து கொண்டே போனதால், அந்த மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டில்லி அரசாங்கம் அதிகாலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் போதுமான வெளிச்சமின்மையால் வாகன விபத்துகளும் அதிகரித்துள்ளது. வாகனங்களில் இருந்து வரும் கரும்புகையோடு பஞ்சாப் மாநிலத்தின் வயல்வெளிகளில் எரிக்கப்படும் குப்பையில் இருந்து வெளியேறும் பெரும் புகையும்  இந்த காற்று மாசு அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண டில்லியில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட ஆட் ஈவன் வாகன பதிவு எண் இயக்க முறையை மீண்டும் பின்பற்ற அரசு முடிவெடுத்துள்ளது. 



சியோமி ரெட்மி Y 1

சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் கடந்த வாரத்தில் புதிய தயாரிப்பான ரெட்மி Y 1 ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. ரெட்மி Y 1  5.5 " தொடுதிரையை கொண்டுள்ளது.   435 சிப்செட் கொண்ட ஸ்நாப்டிராகன் மூலம் இயங்கும் இந்த  ஸ்மார்ட் போன்  3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளக நினைவகமும் கொண்டுள்ளது,  இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16MP  செல்பி கேமராவும், பின்புறத்தில் 13MP   கேமரா வசதியும் கொண்டுள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர் / ஐஆர் பிளாஸ்டர் வசதிகளும் உள்ளது. 


--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 4 November 2017

சென்ற வார உலகம்

அமெரிக்கா: நியுயார்க் டிரக் தாக்குதல் 

கடந்த அக்டோபர் 31ஆம் தேதியன்று நியுயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் நடந்த டிரக் தாக்குதலில் இதுவரை எட்டு பேர் பலியாகியுள்ளனர், பதினொரு பேர் படுகாயமடைந்துள்ளனர். இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்றும், இந்த தாக்குதலை நடத்தியவன் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 29 வயதான சேபுல்லோ சைபோவ் என்றும் இவன் அமெரிக்காவுக்குள் கடந்த 2000 ஆண்டில் கிரீன் கார்ட் லாட்டரி என்று அழைக்கப்படும் டைவர்சிட்டி விசா ப்ரோக்ராம் மூலம் தேர்ந்தெடுக்கபட்டு நுழைந்துள்ளான் என்பது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில்  அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஐந்து பேரும், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணும், இரண்டு அமெரிக்கர்களும் இறந்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு பின்பு தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கிரீன் கார்ட் லாட்டரி நிகழ்வு தடை செய்யப்படும் என்று தெரிகிறது. 


ஸ்பெயின்: கேடலோனியா அமைச்சர்கள் எட்டு பேர் கைது

ஸ்பெயின் நாட்டிலுள்ள கேடலோனியாவில் தனி நாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட எட்டு (முன்னாள்) அமைச்சர்களை ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் சிறையிடைக்க உத்தரவிட்டுள்ளது. கேடலோனியாவை தனி நாடாக அறிவிக்க கோரி அந்த மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது, இந்நிலையில்  கேடலோனியாவை தனி நாடாக அறிவித்து கேடலோனியா மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது, இதை தொடர்ந்து அந்த மாநில ஆட்சி கலைக்கப்பட்டதாக அறிவத்த ஸ்பெயின் அரசு போராட்டகாரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


இந்தியா: உத்திரபிரதேசத்தில் பாய்லர் வெடித்து 30 பேர் இறப்பு 

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி மாவட்டத்திலுள்ள உன்ச்சார் பகுதியில் இயங்கி வரும் (NTPC) தேசிய அனல் மின் நிலையதிலுள்ள பாய்லர் வெடித்ததில் இதுவரை 30 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். , கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த அனல் மின் நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர், இந்த அனல் மின் நிலையத்தின் ஆறாவது அலகில் ஐநூறு மெகாவாட் உறபத்தி திறன் கொண்ட பாய்லர் வெடித்து தீ பிடித்துள்ளது, அதிக அழுத்தம் காரணமாக இந்த பாய்லர் வெடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இந்த சம்பவம்  குறித்து அம்மாநில காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 



சிரியா படையினர் தொடர்  தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் ஓட்டம்  
ஆக்கிரமிப்பு பகுதிகள் விடுவிப்பு 
சிரியா படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் ஆக்கிரமித்துள்ள பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் சிரியா படையினர் நடத்திய தாக்குதலில் டீயர் எஸார்  மாகாணம் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் விடுவிக்கபட்டுவிட்டது. விரைவில் சிரியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் இருந்த சுவடு தெரியாமல் முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று தெரிகிறது.  


ஆப்பிள் - ஐ போன் எக்ஸ் அறிமுகம்

ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் 1 லட்சம் ரூபாய் விலைமதிப்புள்ள ஐ போன் 10 அல்லது ஐ போன் எக்ஸ் (256 ஜிபி) மாடலை அறிமுகபடுத்தியுள்ளது.   இதன் இன்னொரு 64 ஜிபி மாடல் 89000 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது.  ஐ போன் எக்ஸ் (256 ஜிபி) அறிமுகம் மற்றும் பயனாளர் விமர்சனம்  கீழே 

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்