Saturday 4 November 2017

சென்ற வார உலகம்

அமெரிக்கா: நியுயார்க் டிரக் தாக்குதல் 

கடந்த அக்டோபர் 31ஆம் தேதியன்று நியுயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் நடந்த டிரக் தாக்குதலில் இதுவரை எட்டு பேர் பலியாகியுள்ளனர், பதினொரு பேர் படுகாயமடைந்துள்ளனர். இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்றும், இந்த தாக்குதலை நடத்தியவன் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 29 வயதான சேபுல்லோ சைபோவ் என்றும் இவன் அமெரிக்காவுக்குள் கடந்த 2000 ஆண்டில் கிரீன் கார்ட் லாட்டரி என்று அழைக்கப்படும் டைவர்சிட்டி விசா ப்ரோக்ராம் மூலம் தேர்ந்தெடுக்கபட்டு நுழைந்துள்ளான் என்பது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில்  அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஐந்து பேரும், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணும், இரண்டு அமெரிக்கர்களும் இறந்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு பின்பு தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கிரீன் கார்ட் லாட்டரி நிகழ்வு தடை செய்யப்படும் என்று தெரிகிறது. 


ஸ்பெயின்: கேடலோனியா அமைச்சர்கள் எட்டு பேர் கைது

ஸ்பெயின் நாட்டிலுள்ள கேடலோனியாவில் தனி நாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட எட்டு (முன்னாள்) அமைச்சர்களை ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் சிறையிடைக்க உத்தரவிட்டுள்ளது. கேடலோனியாவை தனி நாடாக அறிவிக்க கோரி அந்த மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது, இந்நிலையில்  கேடலோனியாவை தனி நாடாக அறிவித்து கேடலோனியா மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது, இதை தொடர்ந்து அந்த மாநில ஆட்சி கலைக்கப்பட்டதாக அறிவத்த ஸ்பெயின் அரசு போராட்டகாரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 


இந்தியா: உத்திரபிரதேசத்தில் பாய்லர் வெடித்து 30 பேர் இறப்பு 

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி மாவட்டத்திலுள்ள உன்ச்சார் பகுதியில் இயங்கி வரும் (NTPC) தேசிய அனல் மின் நிலையதிலுள்ள பாய்லர் வெடித்ததில் இதுவரை 30 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். , கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த அனல் மின் நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர், இந்த அனல் மின் நிலையத்தின் ஆறாவது அலகில் ஐநூறு மெகாவாட் உறபத்தி திறன் கொண்ட பாய்லர் வெடித்து தீ பிடித்துள்ளது, அதிக அழுத்தம் காரணமாக இந்த பாய்லர் வெடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இந்த சம்பவம்  குறித்து அம்மாநில காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 



சிரியா படையினர் தொடர்  தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் ஓட்டம்  
ஆக்கிரமிப்பு பகுதிகள் விடுவிப்பு 
சிரியா படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் ஆக்கிரமித்துள்ள பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் சிரியா படையினர் நடத்திய தாக்குதலில் டீயர் எஸார்  மாகாணம் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் விடுவிக்கபட்டுவிட்டது. விரைவில் சிரியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் இருந்த சுவடு தெரியாமல் முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று தெரிகிறது.  


ஆப்பிள் - ஐ போன் எக்ஸ் அறிமுகம்

ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் 1 லட்சம் ரூபாய் விலைமதிப்புள்ள ஐ போன் 10 அல்லது ஐ போன் எக்ஸ் (256 ஜிபி) மாடலை அறிமுகபடுத்தியுள்ளது.   இதன் இன்னொரு 64 ஜிபி மாடல் 89000 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது.  ஐ போன் எக்ஸ் (256 ஜிபி) அறிமுகம் மற்றும் பயனாளர் விமர்சனம்  கீழே 

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்