அமெரிக்கா: சர்ச்சில் நடந்த துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலி
கடந்த ஞாயிறு அன்று, அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சதர்லாண்ட் ஸ்ப்ரிங்ஸ் பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். குறைந்தது 20 பேர் வரை காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்க் போம்ரே என்ற பாப்திஸ்து சபை போதகர் அவர்களின் மகளும் இந்த துப்பாக்கி சூட்டில் பலியாகி இறந்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய 26 வயதான டெவின் பேட்ரிக் கெல்லியை காரில் போலீசார் துரத்தி பிடிக்க முயன்ற போது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் கெல்லி இறந்து விட்டான், இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிக கொடூரமான தாக்குதல் என்று வேதனையுடன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா - லெபனான் போர் மூளும் அபாயம்
சவுதி அரேபியா நாட்டிற்கும் லெபனான் நாட்டிலுள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் இப்போது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான யுத்தமாக உருமாற துவங்கி உள்ளது. சவுதி அரேபியா நாட்டில் நடந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கமே காரணம் என்று சவுதி அரசு கருதுகிறது. ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கத்திற்கு சவுதி அரேபியா அரசு அமெரிக்காவோடும், மேற்கத்திய நாடுகளோடும் காட்டி வரும் நெருக்கம் பெரும் வருத்தத்தை அளித்து வந்தது. சவுதி அரசாங்கமே, தீவிரவாத இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்க தவறியதாக கூறி லெபனான் நாட்டின் பிரதமரை பதவி விலக செய்தது என்றும், பின்பு லெபனான் பிரதமரை செயல்பட விடாமல் வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கம் சவுதி அரேபியா அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது, இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் சவுதி அரசாங்கம், ஏமன் பகுதியிலிருந்து தங்கள் நாட்டின் மேல் கடந்த சனிக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தி தங்கள் நாட்டின் மீது லெபனான் போர் தொடுத்துள்ளது என்று கூறி, லெபனான் நாட்டிலுள்ள தங்கள் நாட்டு மக்களை அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறும்படி எச்சரிக்கை செய்துள்ளது. இதனை தொடர்ந்து குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை லெபனான் நாட்டில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளன. இந்த நடவடிக்கை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
வியட்நாம்: மழை - வெள்ளத்தில் சிக்கி 106 பேர் பலி
வியட்நாம் நாட்டில் பல சர்வதேச நாடுகளின் அதிபர்கள் கலந்து கொள்ளவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில் அந்த நாட்டை டாம்ரே புயல் உலுக்கியெடுத்து வருகிறது, பெரும் புயலோடு 1700 மிமீ மழை பெய்ததில் 49 அணைகள் அபாய அளவை தாண்டி விட்டதால் அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 197 பேர் புயலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன:
இந்தியா: டில்லியில் விஸ்வரூபமெடுக்கும் காற்று மாசு வீட்டுக்குள் முடங்கும் மக்கள்
நம் நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்று 144 தடை உத்தரவை அரசாங்கம் பிறப்பிப்பது வழக்கம், ஆனால் கடும் பனிப்பொழிவோடு காற்றில் மாசும் அளவுக்கதிகமாக அதிகரித்து கொண்டே போனதால், அந்த மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டில்லி அரசாங்கம் அதிகாலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் போதுமான வெளிச்சமின்மையால் வாகன விபத்துகளும் அதிகரித்துள்ளது. வாகனங்களில் இருந்து வரும் கரும்புகையோடு பஞ்சாப் மாநிலத்தின் வயல்வெளிகளில் எரிக்கப்படும் குப்பையில் இருந்து வெளியேறும் பெரும் புகையும் இந்த காற்று மாசு அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண டில்லியில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட ஆட் ஈவன் வாகன பதிவு எண் இயக்க முறையை மீண்டும் பின்பற்ற அரசு முடிவெடுத்துள்ளது.
சியோமி ரெட்மி Y 1
சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் கடந்த வாரத்தில் புதிய தயாரிப்பான ரெட்மி Y 1 ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. ரெட்மி Y 1 5.5 " தொடுதிரையை கொண்டுள்ளது. 435 சிப்செட் கொண்ட ஸ்நாப்டிராகன் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளக நினைவகமும் கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16MP செல்பி கேமராவும், பின்புறத்தில் 13MP கேமரா வசதியும் கொண்டுள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர் / ஐஆர் பிளாஸ்டர் வசதிகளும் உள்ளது.
--------------------------------------------------------------