Saturday 25 November 2017

சென்ற வார உலகம்

பாகிஸ்தான்: இஸ்லாமாபாத்தில் கலவரம் ஒடுக்க தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புக்கு தடை 

பாகிஸ்தான் அரசு சமீபத்தில் கொண்டு வந்த சட்ட திருத்தம் ஒன்று தங்கள் மத கோட்பாட்டுக்கு எதிராக இருப்பதாக கூறி சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. அந்த சட்டத்தை மீண்டும் மாற்றி அமைத்து விட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது ஆனால் சட்டத்தை கொண்டு வந்த சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அந்த அமைப்புகள் போராட்டத்தை கை விட மறுத்து தொடர்ந்து போராடி வந்தனர், இஸ்லாமாபாத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை ஒன்றை  போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  இதையடுத்து பாகிஸ்தான் நாட்டு உயர்நீதிமன்றம் போராட்டக்காரர்களை கலைக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. 8500 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு  படையினரும், போலிசாரும் இணைந்து போராட்டக்காரர்களை விரட்டும் பணியில் ஈடுபடுத்தபட்டதில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை க்ண்டுகளும், ரப்பர் குண்டுகளும் வீசப்பட்டது, போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதில் நடவடிக்கையாக பாதுகாப்பு படை வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.  இந்த  சம்பவங்களை நேரடியாக ஒளிபரப்பி வந்த தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டு உள்ளன. 


எகிப்து: மசூதியில் தீவிரவாதிகள்  தாக்குதலில் 235 பேர் பலி 

நேற்று வெள்ளிகிழமை நவம்பர் 24ஆம் தேதி எகிப்து நாட்டின் வடக்கு சினாய் பகுதியிலுள்ள அல் ரவ்தா மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் 235 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மசூதியின் பல இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தும் வெளியில் தப்பி ஓடி வரும் மக்களை துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளனர். மசூதியிலிருந்து    வெளியேறும்   மக்கள் தப்பிக்க   முடியாதபடி வெளியில் நின்றிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து உள்ளனர். மனிதத்தன்மையற்ற இந்த கொடூர தாக்குதலை உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது ஐஎஸ் தீவிரவாத இயக்கமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  


ஜிம்பாப்வே: புதிய அதிபராக எம்மர்சன் பதவியேற்றார் 

ஜிம்பாப்வே நாட்டில் கடந்த வாரத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது, அதிபர் பதவியில் இருந்து விலக மறுத்து வந்த ராபர்ட் முகாபே அரசியல் மற்றும் ராணுவ நெருக்கடி காரணமாக பதவி விலகியதை தொடர்ந்து வெள்ளிகிழமை அன்று புதிய அதிபராக துணை அதிபர் பதவி வகித்து வந்த 75 வயதான எம்மர்சன் நங்கக்வா பதவியேற்றார். கடந்த 37 ஆண்டுகளாக ஜிம்பாப்வே நாட்டை ஆட்சி செய்த முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வந்ததை அந்நாட்டின் பொதுமக்கள் பலர் கொண்டாடி வருகின்றனர். இப்போது அதிபர் ஆகியிருக்கும் எம்மர்சன் வரும் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள போது தேர்தலில் வெற்றி பெற்றால் தான் அதிபர் நாற்காலியை தக்க வைத்து கொள்ள முடியும் என்பது 
குறிப்பிடத்தக்கது. 


காணாமல் போன அர்ஜென்டினா நீர்முழ்கி கப்பல் தேடும் பணி தீவிரம்

தெற்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் காணாமல் போன  அர்ஜென்டினா நாட்டு ராணுவ நீர்முழ்கி கப்பல், கடைசியாக ராடார் சிக்னல் கிடைத்த  இடத்துக்கு அருகிலிருந்து பலத்த சத்தம் கேட்டதால் நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறியிருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதையடுத்து காணாமல் போன நீர்முழ்கி கப்பலை தேடும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளது. கப்பலில் பயணித்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பாதுகாப்பு குறைபாடு கொண்ட கப்பலில் தங்கள் உறவுகளை பயணம் செய்ய வைத்து விட்டதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர். 


அமெரிக்கா: அமெரிக்க அதிபரின் டைம் கேம்

கடந்த வருடம் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம் பத்திரிக்கை 2௦16 ஆம் வருடத்தின் சிறந்த மனிதராக அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பை தேர்ந்தெடுத்து அறிவித்தது.  இந்த ஆண்டும் டைம் பத்திரிக்கை சிறந்த மனிதராக தன்னை அறிவிக்க விரும்பி தன்னை தொடர்பு கொண்டதாகவும்  ஆனால் தான் அதை மறுத்து விட்டதாகவும் ட்ரம்ப் டிவிட்டரில் தெரிவித்திருந்தார், ஆனால் டைம் பத்திரிக்கை இந்த செய்தியை மறுத்துள்ளது. 

--------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்