இஸ்ரேல் நாட்டின் தலைநகரமாக ஜெருசலேம் - அமெரிக்கா அங்கீகாரம்
உலக நாடுகள் பல இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிக்க தயங்கிய நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் நகரை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளார், இந்த முடிவை செயல்படுத்தும் வகையில் அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரத்திலிருந்து ஜெருசலேம் நகரத்துக்கு மாற்ற போவதாகவும் அறிவித்துள்ளார். ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் நாடுகள் இரண்டுமே தங்களுடையது என்று கருதி வரும் நிலையில், இந்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். முன்பு, ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அறிவிப்பது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண ஐ.நா. அறிவுறுத்தியிருந்தது.
ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின் இஸ்ரேல் பாலஸ்தீனம் எல்லையில் பதற்றம்
இஸ்ரேல் பாலஸ்தீன எல்லை பகுதியான மேற்கு காசா பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. கடந்த வெள்ளிகிழமை இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் பாலஸ்தீனர்கள் திரளாக ஒன்று கூடி ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்த இஸ்ரேல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போது போராட்டக்காரர்கள் டிரம்ப் உருவப்படத்தை தீயிட்டு எரித்ததை தடுக்க முயன்ற ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, ராணுவத்தினர் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கலவரம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து
ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவுக்கு அரபு நாடுகளின் தலைவர்களும், மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீக் கூட்டமைப்பின் தலைவர் அகமது அப்துல், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு பகுதியில் அமைதி முயற்சிகள் பாதிக்கப்பட்டு ஸ்திரமற்ற நிலை ஏற்படும். வன்முறை பெருகும். அமெரிக்காவின் நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார். பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் “அமெரிக்காவின் இந்த முடிவை ஒருபோதும் ஏற்கமாட்டோம். அமைதி முயற்சிகளை அமெரிக்கா சீர்குலைத்து விட்டது” என்று கூறியுள்ளார். லெபனான், பிரான்ஸ், துருக்கி நாடுகளின் தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் - வரலாறு சொல்லும் உண்மைகள்
கடந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டுக்கும் அரபு நாடுகளுக்கும் நடந்த மத்திய கிழக்கு போரில் மேற்கு ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. கிழக்கு ஜெருசலேம் பகுதி ஜோர்டான் வசம் இருந்தது. பின்பு, 1967-ல் நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமும் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் வந்தது, ஒட்டுமொத்த ஜெருசலேம் நகரத்தையும் தங்கள் கடடுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதால் இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனின் தலைநகராக இருக்கும் என்று கூறி வந்தனர். இஸ்ரேலின் அறிவிப்பை ஏற்காத அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளும் தங்கள் நாட்டு தூதரகங்களை இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரிலேயே செயல்பட செய்தன. கடந்த காலத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன் நாடுகளுக்கு இடையே நடந்தது என்ன? உண்மை வரலாறு சொல்லும் காணொளி காட்சி
ஒரு சுற்றுலா பயணியின் பார்வையில் ஜெருசலேம் நகரம்
பழம்பெருமைமிக்க ஜெருசலேம் நகரம் ஒரு சுற்றுலா பயணியின் பார்வையில்....